இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத வழிபாட்டுத் தலங்களில் கூடும் பக்தர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 100க்கும் அதிகமானோர் கூடக்கூடிய வழிபாட்டு இடங்களில் மறு அறிவித்தல் வரும்வரை 50 பேர் வரையிலேயே கூடமுடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறே, 50 பேர் அளவில் மட்டுமே வழிபடும் வசதி உள்ள இடங்களில் வழமையான எண்ணிக்கையில் அரைவாசி அளவானோரே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், ஆலயங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அவர்களை அடையாளம் காணக்கூடிய வகையில் தகவல்களை பதிய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
ஆலயங்களில் வழமையான பூஜைகள், தனிநபர் வழிபாடுகள் தவிர்ந்த எந்தவிதக் கூட்டுச் செயற்பாடுகளையோ ஒன்று கூடல்களையோ மறு அறிவித்தல் வரும்வரை நடத்தக்கூடாது என்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் எல்லா ஆலயங்களும் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் விகாரைகளில் பின்பற்றப்பட வேண்டும் என சமய, கலாசார அலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.