July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும்’

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்றொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் எமது மீனவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ‘இவ்வாறான ஒரு பிரச்சனையில் இந்திய டோலர் படகுகள் உட்பட ஏனைய படகுகளுக்கு அனுமதி வழங்குவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

எனினும் குறித்த விடயம் ஆராயப்பட வேண்டும். வெளிப்படையாக இந்த விடயங்களை தெரிவிக்கின்ற போது தமிழ் நாட்டு மக்களுக்கும், எங்களுக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தும் சூழ்நிலை காணப்படுவதாகவும்’ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் நாட்டை பொறுத்தவரையில் எமது இனத்தின் பிரச்சினை சார்பாக தமிழ் நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், எமது இனப்பிரச்சினைக்கு அவர்களின் குரல் இன்றியமையாதது.

எனவே இந்திய- இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை ஊக்குவிப்பது சிறந்ததாக அமையும்.

இரண்டு சமூகங்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.