கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்வாக நடவடிக்கைகள் தனியான அலகாக இயங்குவது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
விசேட பொருளாதார வலயமொன்றை தாபிப்பதை ஏற்பாடு செய்வதற்கும், பதிவுசெய்தல்கள், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை வழங்குவதற்கும், கொழும்பு துறைமுக நகர வலயத்தில் வியாபார நடவடிக்கைகளையும் வேறு செயற்பாடுகளையும் கொண்டுநடாத்துவதற்கே அதிகாரமளிக்கப்பட்ட ஆணைக்குழு சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் மற்றும் தவிசாளர் சார்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலமொன்று ஏன் வெளிப்படைத்தன்மை இன்றி, அவசரமாக கொண்டுவரப்பட்டதை அக்கட்சி சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
இந்தச் சட்டமூலம் சிங்கள- தமிழ் புத்தாண்டு கெடுபிடிகளுக்கு மத்தியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், சரிவர ஆராய முடியவில்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆணைக்குழு சட்டமூலம், சட்ட விரோத பணச் சலவை, நிதி மோசடி செயற்பாடுகளின் புகலிடமாக போர்ட் சிட்டியை மாற்றும் அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடையது என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.