
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாகக் கோருவதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் கடந்த 1515 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனவர்களின் உறவினர்கள் புது வருடப் பிறப்பன்று மேற்கொண்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட எந்தவொரு குழந்தையும் 2009 ஆம் ஆண்டு முதல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தாம் இழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு பௌத்த மத குருக்கள், சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள பொதுமக்களே காரணமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிங்கள மக்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாம் 2017 முதல் அமெரிக்காவின் தலையீட்டைக் கோரி வருகின்ற நிலையில், இப்போது அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலை மற்றும் ஒடுக்குமுறைகளில் இருந்து தமிழர்களை மீட்க அனைவரும் கூட்டாக அமெரிக்காவின் தலையீட்டைக் கோர வேண்டும் என்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.