இலங்கை –ஓமான் நாடுகள் இடையிலான இராஜதந்திர உறவுக்கு 40 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிறப்பு செய்தியை எடுத்துக்கொண்டு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 40 ஆவது வருட ஆரம்பத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தப்பட்ட அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பில் ஓமான் நாட்டு சுல்தான் ஹைதம் பின் தாரிக்கு, அனுப்பி வைக்கப்பட்ட பிரதமரின் முக்கிய செய்தி, ஓமானின் சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையித் ஆசாத் பின் தாரிக் அல் சையத்திடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டது.
குறித்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.
இதனிடையே, இலங்கை தூதுக்குழு ஓமான் நாட்டு வர்த்தக, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கைஸ் பின் மொஹமட் அல் யூசெப்பை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பரஸ்பர பொருளாதார ஒத்துழைப்புக்கான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேபோல, ஓமான் மத்திய வங்கியின் நிர்வாகத் தலைவர் தாஹிர் சலீம் அல் அமீரையும் சந்தித்து, இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் இரு நாட்டு மத்திய வங்கிகளுக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள இலச்சினைகளை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிரமுகர்களுக்கு வழங்கி வைத்தார்.
மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஓமான் நாட்டு தூதுவர் அமீர் அஜ்வாத், இலங்கை மத்திய வங்கியின் 10 உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.