இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் வரையான தகவலின்படி, 106 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனாவின் புதிய அலைக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1187 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வார இறுதியில் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடயிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பெண்ணொருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடெங்கிலும் பல மாவட்டங்களில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தால் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
மேல்மாகாணம்
மேல் மாகாணத்தில் நடத்தப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் ஆங்காங்கே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை களனிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாளர்கள் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு இரண்டு வார்ட்டுகளும், சத்திர சிகிச்சை பிரிவு ஒன்றும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
அத்துடன், கொழும்பு பொரளையில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 9 மாதக் குழந்தை ஒன்றுக்கும், அந்த வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
பாணந்துறை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு ஊழியர் ஒருவரின் மகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அந்தப் பிரிவை மூடி அங்கு பணியாற்றுபவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்திலுள்ள மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையிலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில், அங்கு மேலும் 11 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கற்கும் மாணவி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியான நிலையில், அந்த மாணவி தங்கியிருக்கும் தனியார் விடுதியில் அவருடன் இருந்த நண்பியின் சிறிய தாய் மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம், சிலாபத்தில் மீனவர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவருடன் தொழிலுக்குச் சென்ற 6 மீனவர்கள் படகொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வடமாகாணம்
இதேவேளை மன்னாரிலும் மேலும் 5 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை தனிமைப் படுத்தப்பட்டவர்களில் 27 பேருக்கு முதல் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட கட்டட தொழிலாளியுடன் தொடர்புடையவர்களுக்கே இப்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வென்னப்புவ பகுதியை சேர்ந்தவர்களாவர்.
வட பிராந்தியத்தில் இதுவரையில் 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் புங்குடுதீவில் அடையாளம் காணப்பட்ட ஒருவரும், முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்ட நால்வரும் மினுவாங்கொட தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்.
கிழக்குமாகாணம்
தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதுமான வைத்தியசாலைகள் தேவைப்படுவதால், சகல மாவட்டங்களிலும் வைத்தியசாலைகளில் சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த பிரிவுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் திருகோணமலையில் ஒருவரும் அம்பாறையில் இருவரும் இதுவரை தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மினுவாங்கொட தொற்றாளர்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் 4629 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்; இவர்களில் 950 பேர் கடற்படையினர்; 1527 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 651 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் அடையாளம் காணப்பட்டவர்கள், 313 பேர் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள், ஏனைய 1180க்கும் அதிகமானவகள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.