
நாட்டிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கதைப்பதாகக் கூறி, போலி தொலைபேசி அழைப்புகளின் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்து, ஏமாற்றும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, கொழும்பிலுள்ள முன்னணி வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து, அதற்குப் பதிலாக போலியான காசோலைகளை வழங்கி, மோசடியில் ஈடுபடுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களைப் போன்று போலி குரல் பதிவுகளைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த போலி குரல் பதிவுகளை நம்பி, மீள தொடர்புகளை ஏற்படுத்திய வர்த்தகர்கள் சிலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, இரண்டு முன்னணி கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இருந்து 47 இலட்சம் மற்றும் 29 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகளைக் கொள்வனவு செய்வதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஆகவே, இவ்வாறு மோசடிகளின் மூலம் ஏமாற்றப்பட்டவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன், இவ்வாறான நவீன மோசடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட வேறு எவரேனும் இருப்பின் அவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலக்கம் 182, எல்விட்டிகல மாவத்த, கொழும்பு 8 எனும் முகவரியில் உள்ள மோசடி தடுப்பு பணியகத்துக்கோ சென்று முறையிடுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.