January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனைக் கொல்லச் சதித்திட்டம்: வழக்கில் இருந்து 11 சந்தேக நபர்கள் விடுதலை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கொல்லச் சதித்திட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் ஆயுத வர்த்தகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருந்த பிரபல குற்றக் கும்பல் உறுப்பினர் கனேமுல்ல சஞ்ஜீவ உள்ளிட்ட 11 சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் தரப்பினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் யுத்தக் காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைத்திருந்த ஆயுதங்களை தென்பகுதிக்கு கடத்தி பாதாள குற்றக் கும்பல்களுக்கு விற்பனை செய்ததாகவும், சுமந்திரனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் 2019 ஆம் ஆண்டில் 15 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்டட விசாரைணையை அடிப்படையாகக் கொண்டே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது கனேமுல்லை சஞ்ஜீவ வேறு வழக்கொன்றில் விளக்கமறியலில் இருந்த நிலையில், பயங்காரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவரை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேக நபர்களில் 11 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மற்றைய நான்கு பேர் தொடர்பிலும் விரைவில் வழக்குத் தொடரப்படவுள்ளதாக சட்டமா அதிபரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.