November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அழிவுப் பாதையை நோக்கி செல்கின்றது இலங்கை அரசு‘; மாவை எச்சரிக்கை

‘இலங்கை அரசின் போக்குகள் சர்வதேச நாடுகளின் உறவு நிலையில் இருந்து விலக்கிச் செல்கின்றது. இதனை உணராமல் இந்த அரசு செயற்படுகின்றது’ என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அரசின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

‘இலங்கை அரசின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல வல்லுநர்களும் மனித உரிமை அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதார பாதிப்புக்குள்ளாகியுள்ளது.பல தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதுடன், வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலைகள் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் அரசின் திட்டமிடல் இல்லாத போக்கு அழிவுப் பாதையை நோக்கி நாட்டை கொண்டு செல்லும் என அவர் கூறினார்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கோ போரால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கோ தீர்வு காண திட்டங்களை வகுக்க முடியாதவர்களாக இந்த ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

ஆட்சிக்கு வந்தது முதல் நிர்வாகத்துக்குள் இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மட்டுமன்றி ஏனைய நிர்வாகத்திலும் மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றது. இது சர்வாதிகாரப் போக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நிலைமையையே காண்பிக்கின்றது.

அரசின் இந்த போக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி ஜனநாயகத்தை விரும்புகின்ற மக்களுக்கும் பாதிப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்படுத்தும்.

நாங்கள் இந்த அரசின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அதுமட்டுமன்றி ஐ.நா.மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய நாடுகள் இந்த அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்’ எனவும் அவர் கூறினார்.