புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா தொற்றால் பல்வேறு விதமாகவும் பாதிக்கப்பட்ட சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் பட்டியலில் உள்ள 7 வகையான குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கொடுப்பனவை நாடு முழுவதிலும் உள்ள கிராம சேவகர் அலுவலகங்களின் மூலம் விநியோகிக்க ஏற்பாடு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்- சிங்கள புத்தாண்டு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், இவ்வாறான அரசர திட்டமொன்றை அறிமுகப்படுத்தியதையிட்டு, கிராம சேவகர்கள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் அவசர தீர்மானம் கிராம சேவகர்களை அசௌகரியத்தில் தள்ளியுள்ளதாக கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்கு முன்னைய தினம் விடுக்கப்பட்ட அறிவிப்பால், 5000 ரூபா வழங்கப்பட வேண்டியவர்களைத் தெரிவு செய்வதிலும் தாம் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக கிராம சேவகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேநேரம், மன்னார் மாவட்டத்தில் தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளான குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான ‘சமூக நல கொடுப்பனவு’ வழங்கும் திட்டம் மன்னார் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.