May 23, 2025 14:09:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்பு விற்பனையில் மோசடி’: பொறுப்பதிகாரி குற்றச்சாட்டு

காங்கேசன்துறை லங்கா சீமெந்து தொழிற்சாலையில் உள்ள பல கோடி ரூபா பெறுமதியான இரும்புகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிற்சாலையின் பொறுப்பதிகாரி பொன்னையா விமலநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

திறந்த விலை மனுக்கோரல் முறையின்றி, இரகசியமான முறையில் சில அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 250 இற்கு அதிகமான பங்குதாரர்களைக் கொண்ட லங்கா சீமெந்து நிறுவனத்தின் சொத்துகளை இவ்வாறு விற்பனை செய்வதன் மூலம் ஏனையவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, இதற்கு முன்பு தொழிற்சாலையில் இடம்பெற்ற திருட்டுகள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தியமைக்காக தமக்கு 33 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் பொன்னையா விமலநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.