இலங்கையில் அண்மைக்காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இறக்குமதி செய்யப்பட்ட நஞ்சுப் பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் சில இன்று காலை மீண்டும் திருப்பியனுப்பப்பட்டன.
ஆறு கொள்கலன்களில் மொத்தம் 105 மெட்ரிக் டொன் தேங்காய் எண்ணெய் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ‘அப்லாடொக்ஸின்’ (Aflatoxin) நச்சுப்பொருள் அதிகளவில் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் தர நிர்ணய சபை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
புற்றுநோய் ஏற்படுத்தும் இரசாயனப் பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய்யை இறக்குமதி செய்ய அரசாங்கம் தெரிந்தே, நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது.
அத்தோடு, தரமற்ற தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வர்த்தகர்களுக்கு அனுமதி வழங்கியதாக இலங்கை தர நிர்ணய நிறுவனம் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் மாதிரிகள் சந்தையில் உள்ளதா என்பதை அறிய நாடளாவிய ரீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் எண்ணெய் மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதில் நஞ்சுப்பொருள் அடங்கிய தேங்காய் எண்ணெய் சந்தையில் கண்டறியப்படவில்லை என அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது ரூ. 30 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள தேங்காய் எண்ணெய்யை பார்பரா கப்பல் மூலமாக மலேசியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது.