ரத்மலானை விமான நிலையத்தை உல்லாசப் பயண விமான நிலையமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அதன்படி, ரத்மலானை விமான நிலையம் உல்லாசப் பயணம், திருமண புகைப்படம் எடுத்தல், நாடகம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கு ஊக்குவிக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ரத்மலானை விமான நிலையம் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய ஜனவரி 1 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இலங்கையின் சுற்றுலா தலங்களில் விமான வழித்தடங்கள் மற்றும் விமானங்களுக்கு ஏற்ற புதிய ஓடுபாதைகள் அமைக்கப்படுவதன் மூலம் உள்p=0[நாட்டு விமான பாதைகளை விஸ்தரிக்கவும் இந்த புதிய திட்டம் வழிவகுக்கின்றது.
இது தவிர, சர்வதேச விமானங்களுக்கான விளம்பரங்களையும், தனியார் ஜெட்களையும் தொடங்க எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.
ரத்மலானை விமான நிலையத்திலிருந்து இதுவரை மொத்தமாக 16,511 விமான சேவைகள் இயக்கப்பட்டுள்ளன. அதில் ஜனவரி 1 முதல் 432 உள்நாட்டு விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ரத்மலானை விமான நிலையத்திலிருந்து நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவைகளை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.
ரத்மலானையின் விமான பயணங்களை ஊக்குவிக்கும் முகமாக விமானங்களை இயக்க விரும்பும் நிறுவனங்களுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு விமானங்களுக்கான தரிப்பிடக் கட்டணம் மற்றும் பயணிகளுக்கு விதிக்கப்படும் விமான சேவை வரியும் ஒரு வருடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.