அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை அதிபரின் காரியாலயத்தை உடைத்து 6 புதிய மடிக்கணினிகளைக் களவாடிய ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை அல் முனீர் பாடசாலை கடந்த 01 ஆம் திகதி முதல் அடுத்த 4 நாட்கள் தொடர் விடுமுறைக்காக மூடப்பட்டிருந்தது.
விடுமுறையின் பின்னர் திங்கட்கிழமை பாடசாலைக்குச் சென்ற அதிபர் தமது அறை உடைக்கப்பட்டு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றும் ரூபா 150,000 பெறுமதியான 6 எச்.பி ரக மடிகணினிகள் களவாடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் பாடசாலையின் அதிபர் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதலை அடுத்து சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 20, 23, 25, மற்றும் 30 வயதுகளை உடை ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து களவாடப்பட்ட 6 மடிக்கணினிகள் மற்றும் உதிரிப்பாகங்களும் மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ஐ.என் றிஸ்வான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்டதை அடுத்து ஐவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.