புத்தாண்டு காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டை ஒட்டி தமது ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பணியை முன்னெடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சங்கம் தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 ஆம் திகதிக்கு முன்னதாக மார்ச் மாத கொடுப்பனவுகள் கிடைக்கப்பெறும் நிலையில், இந்த ஆண்டு தமக்கான கொடுப்பனவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
அதன் காரணமாக தமது ஊழியர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகளை வழங்குவதில் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஊழியர்களின் வருகை குறைவடைவதுடன் நாட்டில் பெற்றோலிய எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.