July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாது; சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கொரோனா

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளியேறும் நபர்கள் மீது எழுமாறாக விரைவான அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தும் திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை )முதல் மேற்கொள்ளப்படும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும், விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பரிசோதனை இடங்களை முன்னர் வெளியிட்டதனால் பொதுமக்கள் கொழும்பில் இருந்து வெளியேற மாற்று வழிகளை கையாண்டதன் விளைவாகவே பரிசோதனை இடங்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார ஆலோசனைகளை முறையாக பின்பற்றுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுகாதார வழிமுறைகளை உரிய வகையில் பின்பற்றாவிடின் மிகுந்த சவாலுக்கு மத்தியில் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சீர்குலையுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டு காலத்தில் முகக்கவசங்களை அணிந்து, சமூக இடைவெளிகளைப் பேணி நடந்து கொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது நாளாந்தம் சுமார் 200 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றும் கூறினார்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள் என்பதால் எழுமாறாக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.