தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி இலங்கையின் சிகிரியா பிரதேசத்தில் 500 க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். முஷரப் முதுநபின் தெரிவித்துள்ளார்.
மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சட்டத்தரணி றுடானி ஸாஹிரால் தொகுக்கப்பட்ட ‘அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே முஷாரப் எம்.பி இதனை கூறியுள்ளார்.
சிகிரியா பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குறித்த மட்பாண்ட எச்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான நிபுணர்கள் உள்ளனர் எனவும், இதனாலேயே தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவாக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கிப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.