Photo: pexels.com
பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் இவ்வாறு தடை செய்யப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ள உற்பத்திகளின் பட்டியல் சுற்றாடல் அமைச்சுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாகவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது,
குறிப்பாக, ஊதப்பட்ட பொம்மைகள், சசெட் (sachet packets) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு ஆகியவை தடைசெய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன், பிளாஸ்டிக், காற்றடைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள், 20 கிராம் மற்றும் 20 மில்லி லீற்றருக்கு குறைந்த நிறைகொண்ட சசெட் பைக்கற்றுக்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(உணவு மற்றும் மருந்துகளை பொதி செய்வதைத் தவிர)
மேலும், ஊதப்பட்ட பொம்மைகள் (பலூன்கள், பந்துகள், நீர் மிதக்கும் Pool பொம்மைகள் மற்றும் நீர் விளையாட்டு கியர் தவிர) மற்றும் பிளாஸ்டிக் தண்டுகளுடன் கூடிய காது தூய்மை செய்யும் பஞ்சு (மருத்துவ, மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டவை தவிர) தடைசெய்யப்பட்டுள்ளன என சுற்றாடல் அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வது தொடர்பில் தொடர்ந்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளர்.
இவ்வாறு தடை செய்யப்படுகின்ற, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுக்கு பதிலாக மாற்று உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் வேலைத் திட்டம் தொடர்ந்து இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.