January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கில் ஒன்றரை வருடங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர்கள் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் காங்கேசன்துறை மற்றும் தெல்லிப்பழை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 15 மின் நீர்ப்பம்பிகள், வாகனங்கள் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் மோட்டர், புள்ளுவெட்டி இயந்திரம் உள்ளிட்ட பெறுமதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது சந்தேக நபர்களினால் கடந்த ஒன்றரை வருடங்களாக திருடப்பட்டு வந்த பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

காங்கேசன்துறைக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ஹொட்டகச்சியின் வழிகாட்டலில் தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மெர்சான் இந்துக்கலா சில்வா மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சுமணசிறி தலைமையிலான பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை சந்தேக நபர்கள் இருவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.