முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனின் விடுதலைக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 100 பேர் கையெழுத்திட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரியாஜ் பதியுதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் விரிவான விசாரணையை முன்னெடுத்து அவரை மீண்டும் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதம் மூலம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரியாஜ் பதியுதீன், 5 மாதங்களின் பின்னர் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.
இவர் விடுதலை செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையிலேயே ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
நிமல் சிறிபால டி சில்வா, எஸ். வியாழேந்திரன், திலும் அமுனுகம, சுசில் பிரேமஜயந்த, மொஹமட் முஸம்மில், உதய கம்மன்பில, அங்கஜன் இராமனாதன், காதர் மஸ்தான், விமல் வீரவன்ஸ, சரத் வீரசேகர மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட எம்.பி.க்கள் அந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.