January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாக்கு நீரிணையில் குமார் ஆனந்தனின் சாதனை இலங்கை விமானப்படை வீரரால் முறியடிக்கப்பட்டது

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரொஷான் அபேசுந்தர, பாக்கு நீரிணையை இரு புறங்களில் இருந்தும் கடந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதன்படி தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையும் பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் வரையும் கடந்து, இலங்கையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் 50 வருடங்களுக்கு முன்னர் நிலைநாட்டியிருந்த சாதனையை ரொஷான் அபேசுந்தர இன்று முறியடித்துள்ளார்.

ரொஷான் அபேசுந்தர இருபுறங்களில் இருந்தும் 59.3 கிலோமீட்டர் தூரத்தை 28 மணித்தியாலங்கள் 19 நிமிடங்களில் கடந்துள்ளார்.

இதற்கு முன்னர் 1971 ஆம் ஆண்டில் ‘ஆழிக்குமரன்’ என அழைக்கப்படும் குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையினை இரு புறங்களில் இருந்தும் 51 மணித்தியாலங்களில் கடந்து கின்னஸ் சாதனை படைத்தார்.

இதேவேளை, பாக்கு நீரிணையை முதன்முதலாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற இலங்கைத் தமிழர் 1954 ஆம் ஆண்டு நீந்தி கடந்தார்.
இதனையடுத்து, 1966ஆம் ஆண்டில் கொல்கத்தாவைச் சேர்ந்த மிகிர்சென் என்பவ நீந்திக் கடந்தார்.

இந்நிலையில், 51 வருட சாதனையை முறியடிக்கும் பயணத்தை நேற்று ஆரம்பித்த இலங்கை விமானப் படை வீரர், இன்று முற்பகல் சாதனையை முறியடித்து புதிய சாதனையை புரிந்துள்ளார்.

This slideshow requires JavaScript.

இதனிடையே பாக்கு நீரிணையை இதுவரை 14 பேர் மட்டுமே கடந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரையிலான தூரத்தினை நீந்திக் கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.