யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனை கைது செய்ததன் மூலம் நாட்டு மக்களை திசைதிருப்பி,2019 ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் தொடர்பில் விசாரிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘ யாழ் மாநகர முதல்வர் தனது கடமைகளை மேற்கொண்ட விதம் குறித்து சிக்கல்கள் இருந்தால், பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் பொருத்தமான விசாரணையை மேற்கொண்ட பின்னரே ஒரு முடிவை எட்ட வேண்டும்.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகளின் சீருடை குறித்து தனி விசாரணை நடத்தியிருக்கலாம். அதைவிடுத்து இந்த விடயத்தை வைத்துக் கொண்டு மக்களை திசை திருப்பும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
எனினும் ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அரசாங்கம் வெளிப்படுத்தும் வரை மக்கள் பொறுமையின்றி காத்திருப்பதாக குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், அரசியல் நாடகங்களை நடத்துவதற்கு பதிலாக அரசாங்கம் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஒரு நபரை அரச தரப்பு தாக்குதல்களின் பின்னணியிலிருந்த சூத்திரதாரி என்று பெயரிட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறான பொய்யான தகவல்களை கூறி பொதுமக்களை அரசு தவறாக வழிநடத்துகிறது.
இதற்கு பதிலாக, ஈஸ்டர் தாக்குதல்களுக்கு காரணமான நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.