யாழ். பல்கலைக்கழகத்தில் இரண்டாம் – மூன்றாம் வருட கலைப்பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலுக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 21 மாணவர்களுக்கு தற்காலிக வகுப்புத் தடை விதித்துள்ளதாக பல்கலைக்கழகப் பேரவை அறிவித்துள்ளது.
நேற்று வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் இன்று மாலை கூடிய பல்கலைக்கழகப் பேரவையின் உறுப்பினர்கள் மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளனர்.
குறித்த 21 மாணவர்களும் துணைவேந்தருக்கும் விரிவுரையாளர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் விசாரணை நிறைவடையும் வரையில் அவர்கள் மீதான வகுப்புத் தடை தொடரும் என்றும் பல்கலைக்கழகப் பேரவை தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்த பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், நேற்றைய சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் இனங்காணப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படும் வரை தாம் விரிவுரைகளை மேற்கொள்ளப் போவதில்லை எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கலைப்பீட மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
சமரச முயற்சியில் ஈடுபட முனைந்த தம்மை நிர்வாகத்தினர் தாக்கியதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறித்த மாணவர்கள் கோரியுள்ளனர்.
இதனிடையே, நேற்றைய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வணிக-முகாமைத்துவப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ம. நடராஜசுந்தரம் தனிநபர் ஆணையமாக பல்கலைக்கழகப் பேரவையால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.