கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவான இலங்கை- இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்துள்ளதாக இந்திய சிவில் விமான அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு அமைய தகுதியுள்ள அனைத்து பயணிகளும் கட்டுப்பாடுகளுடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்க முடியும் என்று இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைவான இலங்கை- இந்தியா இடையே பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தில், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இரு நாடுகளினதும் எல்லைகளுக்கு இடையே இயக்க முடியும்.
குறித்த பிரத்தியேக விமானப் போக்குவரத்து வலயத்தினை இரு நாடுகளுக்கும் இடையில் முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து ‘பரஸ்பர பயண’ வலயம் ஒன்று தொடங்குவதற்கான ஏற்பாட்டை இந்தியா முன்வைத்தது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், மாலைதீவு , நைஜீரியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், யு.கே மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 28 நாடுகளுடன் இந்தியா இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இது சார்க் பிராந்தியங்களிடையே இந்தியா செய்துகொண்டுள்ள 6 ஆவது ஒப்பந்தமாக இது உள்ளது.
அண்மையில், அவுஸ்திரேலியா-நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் ‘தனிமைப்படுத்தல்’ இன்றி பயணிப்பதற்கான வாய்ப்பு ‘பரஸ்பர பயண’ வலயத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்டது.
தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆபத்து குறைவாக இருப்பதாகவும் நியூசிலாந்து தெரிவிக்கின்றது.