May 24, 2025 19:01:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்களுக்கான பயணத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் நிறுத்த மாட்டேன்’: யாழ். முதல்வர் மணிவண்ணன்

பாதை எப்படியானது என்பதைத் தெரிந்து கொண்டுதான் பயணத்தை ஆரம்பித்ததாகவும், மக்களுக்கான பயணத்தை எந்தவொரு சூழ்நிலையிலும் நிறுத்தப் போவதில்லை என்றும் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையான பின்னர் ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

யாழ். மாநகரில் தூய்மையைப் பேணும் நன்நோக்கில் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரி நடவடிக்கை தவறாக சித்தரிக்கப்பட்டு, தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“தூய்மையான நகரம், தூய்மையான கரங்கள்” என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்து கொள்வதே தனது பணியென்றும், மக்களுக்கான பயணம் தொடரும் என்று யாழ். முதல்வர் தெரிவித்துள்ளார்.

“மிக நெருடலான சூழ்நிலையில் மக்கள், உள்நாட்டு- வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், தூதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் எனக்காக கொடுத்த குரல், எனக்கு ஆறுதலளித்தது.

என்னுடைய பயணம் மிக நேர்மையாது! வெளிப்படையானது! மக்களுக்கானது!

எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் மன நிறைவுடன் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன்.”

என்று யாழ். முதல்வர் தெரிவித்துள்ளார்.