January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘டக்ளஸின் கருத்து மணிவண்ணன் அரசியல் நோக்கத்தில் கைது செய்யப்பட்டதைக் காட்டுகிறது’: விக்னேஸ்வரன்

நாட்டில் நீதிமன்றங்களும், பொலிஸாரும் ஜனாதிபதியின் தனிப்பட்ட விருப்பு- வெறுப்புக்களுக்கு ஏற்ப செயற்படுகின்றனவா? என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாக’ ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்ததாகவும், விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ‘மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார். அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட மாட்டாது. சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும்’ என்றும் அமைச்சர் டக்ளஸ் கூறியிருந்ததாக, விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரின் டக்ளஸின் கூற்றுகள், மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டுமென்றே கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற உண்மையை வெளிப்படுத்துவதாகவும் விக்னேஸ்வரன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

‘மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்றே அர்த்தப்படும்.

ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று பொலிஸாரினால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை.

ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்?”

எனவும் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதனிடையே, அமைச்சர் டக்ளஸ் கூறியிருக்கும் கருத்து இந்த நாட்டில் பொலிஸ் திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்த அளவுக்கு சுயாதீனத்தை இழந்து, செயற்படுகின்றன என்பதைக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.