photo-biocycle.net
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 270,000 மெட்ரிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் வீணடிக்கப்படுவதாகவும், இதன் விளைவாக இலங்கை பொருளாதாரத்தில் சுமார் ரூ. 20 பில்லியன் இழப்பு ஏற்படுவதாகவும் பொது கணக்குகளுக்கான குழு (கோபா) தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டின் இளம் பராயத்தினரில் சுமார் 73% மானவர்கள் போதுமான அளவு காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்வதில்லை என்றும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலை ஏறக்குறைய 21% என்றும் கோபா குழு வெளிப்படுத்தியுள்ளது.
2015 ஆம் ஆண்டில் தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய தணிக்கைக்கு இணங்க இந்த மதிப்பீட்டை கோபா குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கோபா குழுவின் கூட்டத்தின் போதே இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, இலங்கையில் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கு அறுவடைக்கு பிந்தைய சேதம் மொத்த உற்பத்தியின் 30-40 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக தீர்வை உள்ளடக்கிய ஒரு விரிவான சாகுபடி திட்டம் இல்லாததால், விவசாயிகள் தங்கள் விருப்பப்படி பயிரிடுவதை மேற்கொள்வதால் சில பயிர்கள் அதிகமாக அறுவடை செய்யப்படுகின்றமை உற்பத்திகள் வீணாவதற்கு மற்றுமொரு முக்கிய காரணியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகளை ஆராயும் போது, இலங்கையில் விவசாயத் துறையின் நோக்கத்தை முழுமையாக உள்ளடக்கிய தரமான விவசாயக் கொள்கை இல்லை என்பது தெரியவந்துள்ளது.
தற்போது வரைவு மட்டத்தில் உள்ள 2019 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு விவசாயக் கொள்கை தொடர்பிலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளை குறிவைத்து விவசாயக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியமும் பொதுக் கணக்குகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இடைத்தரகர்கள் வரம்பற்ற இலாபங்களைத் தடுப்பதற்கான ஒரு விரைவான பொறிமுறையை நிறுவுவது உள்ளூர் விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு இடையேயான சிக்கல்களை மேலும் குறைக்கும்.
நியாயமான விலையில் விவசாய பொருட்களை சந்தைப்படுத்தி நாட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விற்பனையை அதிகரிப்பதன் மூலம் அறுவடைக்கு பிந்திய சேதங்களை குறைப்பது குறித்து கோபா குழு ஆராய்ந்துள்ளது.
கோபா கமிட்டி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண இந்த விவகாரத்தை தீர்ப்பதில் மேலும் கவனம் செலுத்துமாறு குழு முன் ஆஜரான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் ஒரு நிலையான விவசாயக் கொள்கையை வகுப்பதில் கோபா குழு கவனம் செலுத்தியுள்ளது.