
சுயாதீன ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான மலிக அபேகோன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டமை பொலிஸாரின் மனித நேயமற்ற செயல் என்று சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, ஊடகவியலாளர் மலிக அபேகோன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸ் நிலையத்தில் மலிக அபேகோன் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
‘மலிக அபேகோன் தாக்கப்படவில்லை’ என பொலிஸார் நீதிமன்றத்தில் மருத்துவ அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர் தரப்பில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக சிறைச்சாலை மருத்துவ அதிகாரி மூலம் மீண்டும் மருத்துவ அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு மாலிகாகந்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் 12 ஆம் திகதி வரை ஊடகவியலாளரை தடுப்புக்காவலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ள சுதந்திர ஊடக இயக்கம், பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்தி, அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.