யாழ்.மாநகர சபையின் முதல்வர் மணிவண்ணனை விடுவித்து மாநகரசபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சாதகமான முடிவை ஜனாதிபதி எடுத்திருக்கிறார் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர்; யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட நகரின் சுத்தம் சுகாதார போக்குவரத்து உள்ளிட்டவற்றை கவனிக்க முதல்வரால் நியமிக்கப்பட்ட காவல் படை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இவ்விடயத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பணியாளர்களை நியமித்தது அவர்களுக்கு சீருடை வழங்கியது தொடர்பான செயலை அறியாத் தவறாக கருதி மணிவண்ணனை விடுவித்து மாநகரசபையின் செயற்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஆவன செய்யுமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்..
குறித்த விடயம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்டிருந்த மணிவண்ணன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் வவுனியாவில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று இரவு மீண்டும் யாழ் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளார் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.