திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார்.
தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது,
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த விடயங்கள் குறித்து எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறேன். எனது நடத்தை மிகப் பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. எனக்கு யாருடனும் தனிப்பட்ட சண்டை இல்லை. எனக்கு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களும் இல்லை.
திருமதி ஸ்ரீலங்கா போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அனைவரையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். அங்கு அவர்கள் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு போட்டியை வெல்ல நியாயமான மற்றும் சமமான வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.
எந்தவொரு போட்டியாளருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ நான் செயல்படவில்லை. எனக்கு சரியானது என்று தோன்றுகின்ற விடயங்களுக்கு மாத்திரம் நான் எப்போதும் எழுந்து நின்றேன்.
திருமதி உலக அழகி பட்டத்தை வெல்வதற்கு எனக்கு ஒரு மேடையை உருவாக்கிக் கொடுத்த போட்டி அமைப்பாளர்களுக்கு இந்த சம்பவத்தினால் சங்கடம் ஏற்பட்டிருந்தால், நானும் அதை அனுபவித்தேன்.
உலகெங்கிலும் மற்றும் எனது நாட்டிலும் கடந்த கால மற்றும் தற்போதைய உலக அழகிப் போட்டிகளில் வென்றவர்களும் இந்த சம்பவத்தினால் அடைந்த சங்கடத்தை நானும் அனுபவித்தேன்.
ஒவ்வொரு உலக அழகிப் போட்டிக்கும் அதற்கென்ற தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு நியாயமான மேடையையும், அனைவருக்கும் பொதுவான ஒரு விதிமுறையையும் தான் ஆதரித்து வந்தேன்.
எனது பார்வையில், திருமதி உலக அழகி கிரீடம் என்பது திருமணம் முடித்து அதற்காக பெரும் தியாகங்களைச் செய்யும், மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் திருமணமான பெண்களின் சர்வதேச கொண்டாட்டமாகும்.
எனவே, திருமதி உலக அழகிப் போட்டி உருவாக்கப்பட்டது விவாகரத்து செய்யப்பட்ட அல்லது குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிந்த பெண்களை இழிவுபடுத்துவதற்காக அல்ல, மாறாக திருமணமான பெண்களின் கனவுகளை கொண்டாடவும், பாராட்டவும் உருவாகப்பட்ட போட்டியாகும்.
இந்த ஆண்டு, உலக திருமதி அழகிப் போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. உலகெங்கிலும் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். அதேபோல, நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருமதி ஸ்ரீலங்கா அழகிக்கும் மீண்டும் உலக திருமதி அழகிகளுடன் போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவார்.
அதில் போட்டியிடுகின்ற திருமதி ஸ்ரீலங்கா அழகியை வெற்றி பெறச் செய்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வது எனது பொறுப்பாகவும், கடமையாகவும் கருதுகிறேன்.
இறுதியாக, நான் வென்ற கிரீடத்தை திருப்பியளித்த பிறகும், எனது குடும்ப வாழ்க்கைக்கான கடமைகளையும், பொறுப்புகளையும் செய்யும்போது, அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதும் அதற்காக அர்ப்பணிப்பதும் எனது திட்டமாகும்.
ஒரு கிரீடத்துக்கு குறிக்கோள் ஒன்று இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தமட்டில் அனைவருக்கும் பொதுவானதாகவும், நியாயமானதாகவும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதாகும்.
தற்போது நான் வென்ற திருமதி உலகி அழகி கிரீடத்தை மீண்டும் திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. பெண்ணொன்றுக்கு தேவைப்படுவது ஒரேயொரு நியாயமான சந்தர்ப்பமே தவிர, வேறொன்றும் கிடையாது நன்றி என தெரிவித்தார்.