November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று முந்தினம் இரவு, யாழ்.மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு வழங்கிய சீருடை தமிழீழ காவற்துறையின் சீருடையை ஒத்த சீருடை என்ற அடிப்படையில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து, யாழ்.மாநகர ஆணையாளர், மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர், முதல்வர் மணிவண்ணன் யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவினால் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் வவுனியா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட மணிவண்ணனிடம், சுமார் 10 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து இன்றிரவு (வெள்ளிக்கிழமை) 8 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் மணிவண்ணனை ஆஜர்படுத்தியவேளையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருக்கிறது.