தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்ச நிலையில் வைத்திருப்பதனையே அரசு விரும்புகிறது என்றும், இதன் வெளிப்பாடாகவே யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் கைது சம்பவம் அமைந்துள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மணிவண்ணனின் கைது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்காக அழைக்கப்பட்டு, மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சுமந்திரன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையும் ஏனைய மாநகர சபைகளைப் போன்று உரிய அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்த முனைகின்றபோது இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மணிவண்ணனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் சுமந்திரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.