யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பியதுடன், அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போது, சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கள் சமர்ப்பணம், வாய் மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து யாழ். மாநகர சபை முதல்வர் மணிவண்ணனின் கைது தொடர்பில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பினர்.
எஸ்.சிறிதரன்
இதன்போது, யாழ் மாநகர சபை முதல்வர் அமைத்த காவல் படையின் சீருடை கொழும்பு மாநகரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட சீருடைக்கு ஒப்பானது என்று சிறிதரன் எம்.பி தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் ஜனநாயகம் பேணப்பட வேண்டுமானால் மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் இது போன்ற நடவடிக்கைகளினால் நாடு பாரதூரமான விளைவுகளை நோக்கியே நகரும் என்றும் என்றும் கூறினார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணன் எமது கட்சியின் முன்னாள் உறுப்பினராவார். விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இள நீல சீருடை அணிபவர்களையெல்லாம் குற்றவாளிகளாக காட்டவே நீங்கள் முற்படுகின்றீர்கள். மணிவண்ணனின் கைது ஒரு அரசியல் பழிவாங்கல் என்றே தோன்றுகின்றது என கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாங்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாதளவுக்கு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது. தமக்கு பிடிக்காதவர்கள் ,எதிரானவர்கள் அடக்கப்படுகின்றனர்.
எனவே அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரா.சாணக்கியன்
கொழும்பு மாநகர சபையில் பின்பற்றப்படும் நடைமுறையைத்தான் யாழ் மாநகர சபையிலும் பின்பற்றியுள்ளார்கள்.ஆனால் கொழும்பில் நன்றாகவுள்ளது, யாழ்ப்பாணத்தில் கெட்டதாகப் பார்க்கப்படுகின்றது என இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனும் தனது உரையில் யாழ் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.