October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மணிவண்ணன் விடயத்தில் ஐநா, வெளிநாட்டு தூதுவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்”: விக்னேஸ்வரன்

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைதானது மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது என பாராளுமன்ற உறுப்பினரும் வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் ஐ. நா மனித உரிமைகள் பேரவை மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாடுகளின் தூதுவர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மணிவண்ணனின் கைது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஒரு சிறிய மாநகரத்தை நிர்வகிப்பதற்கும் தமது பிரதேசங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதற்கும் கூட தமிழ் மக்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த அரசாங்கத்தின் மனநிலையையும், செயற்பாடுகளையும் சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 12 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன புலிகள் மீது அரசாங்கத்திற்கு அவ்வளவு பயமா? என கேள்வியெழுப்பியுள்ள விக்னேஸ்வரன், இந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் எந்தளவு மோசமான ஒரு நிலைமைக்கு சென்றுகொண்டிருக்கின்றன என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு சர்வதேச சமூகத்துக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூய்மை பேணுவதை குறிக்கும் வகையில் வெளிநாடுகள் பலவற்றில் இள நீல ஆடைகளை காவல் கடமைகளில் ஈடுபடும் குழுக்கள் பயன்படுத்துவது வழமை என்றும், கொழும்பு மாநகர சபையும் இள நீல நிற சீருடையுடன் பணியாளர்களை அமர்த்தியுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், யாழ். மாநகர சபையின் ஊழியர்கள் அணிந்த ஆடை விடுதலைப்புலிகளின் காவல்துறையின் இள நீல நிற ஆடையை ஒத்ததாகக் காணப்படுகின்றது என்று கூறுவது நகைப்புக்கு இடமானது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் ஆவிகள் அரசாங்கத் தலைவர்களை நிதானம் இழக்க வைத்து விட்டனவோ நான் அறியேன் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.