November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். மாநகர மேயர் மணிவண்ணன் கைது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் கவலை!

யாழ். மாநகர மேயர் பயங்கரவாதப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்கத் தூதுவர், நீதிமுறை-ரீதியான பாதுகாப்புகளுடன் கூடிய உறுதியான சட்டத்தின் ஆட்சியை பேணுவதே பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்த வழி என்று கூறியுள்ளார்.
‘அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தை பாதுகாத்துக் கொண்டே’ அதனைச் செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அலுவலகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மணிவண்ணன், வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று பகல் சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் இருவரும் நேற்றிரவு 8 மணிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.

இருவரிடமும் அதிகாலை 2 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பின்னர் முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடையை அணிந்திருந்தனர் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரும் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு பல மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படையின் கடமைகளை இடைநிறுத்துமாறு பொலிஸாரால் பணிக்கப்பட்டது.

காவல் படைக்கு வழங்கப்பட்ட சீருடைகளும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டதுடன், கடமைக்கு அமர்த்தப்பட்ட காவலர்கள் ஐவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.