May 25, 2025 23:12:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யாழ். மேயரை கைது செய்யாது ஆளுநர் விளக்கம் கோரல் நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும்”

யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைதை தமிழ் முற்போக்கு கூட்டணி வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், ”கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் எடுத்து, நிதானமாக நடந்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ”அவரது கைதை கண்டித்து, ராஜபக்‌ஷ அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தனது முகத்தை நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும்”என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

”இந்த கைது அரசாங்கத்தினரை மட்டுமல்ல, நம்மவர்கள் சிலபலரையும் திருப்தியடைய செய்திருக்கிறது என நான் அறிகிறேன். கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாக கூறுகிறேன்”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.