
யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படுவதாக மாநகரசபை தகவல்களை மேற்கோள் காட்டி உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இரவு 8 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த மணிவண்ணன், பல மணிநேர விசாரணையின் பின்னர், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக கொண்டுசெல்லப்படுவதாக கூறப்படுகின்றது.
யாழ். மாநகர காவல்படை என்ற பெயரில் 5 காவல் ஊழியர்களை நியமித்த விவகாரம் தொடர்பில் மாநகர சபை ஆணையாளர், மேயர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த விதத்தில் குறித்த காவலர்களின் சீருடை அமைந்திருந்ததாக தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தனர்.
எனினும் கொழும்பு மாநகரசபையின் காவலர்கள் அணிந்திருக்கும் சீருடையை ஒத்ததாகவே யாழ். மாநகர காவலர்களின் சீருடை அமைந்துள்ளதாக மேயர் மணிவண்ணன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
அத்தோடு, பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த சீருடையை விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாகவும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.