February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

படையினருக்கு சொந்தமான, பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இனங்காணுமாறு ஜனாதிபதி கட்டளை

மத அடிப்படைவாத சிந்தனைகளை கொண்ட புத்தகங்களை தடை செய்வது குறித்த தீர்மானம் ஒரு மதத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல, அனைத்து வகையான மத அடிப்படைவாதத்தையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை இனங்காணுமாறு பாதுகாப்பு பிரதானிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் முதலாவதாக கூடிய இந்த ஆலோசனை குழு கூட்டத்தில்,
தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்டல், இராணுவ வீரர்களின் சம்பளம், போதைப்பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு அமைச்சுக்குரிய நிறுவனங்களின் வருடாந்த அறிக்கை போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இந்த கூட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சட்டம், அமைதியை நிலைநாட்டுவதற்காக முன்மொழியப்பட்டுள்ள செயற்பாடுகளைப் பற்றி தெளிவுபடுத்திய ஜனாதிபதி, நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் தேவைக்கேற்ப 196 பொலிஸ் நிலையங்களை புதிதாக ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பொலிஸ் சேவையின் மனித வலுவை அதிகரிப்பதற்காக ஆண், பெண் இருபாலாரில் இருந்தும் 10,000 பேர் புதிதாக இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் இதன்போது தெரிவித்தார்.

மேலும் அங்கவீனமுற்ற, உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கான சம்பளம், கொடுப்பனவுகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதுடன், அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு உயிர் வாழும்வரை வழங்கப்படுகின்ற சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் உயிரிழந்த பின்னர் அவர்களிடம் தங்கி வாழ்வோருக்கும் உயிர் வாழும்வரை வழங்குவதற்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

உயிரிழந்த இராணுவ வீரர்களில் தங்கி வாழ்வோருக்கும் இச்சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் உயிர் வாழும் வரை பெற்றுக்கொள்வதற்கு இதனால் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது என்றும் இராணுவ வீரர்களின் குடும்பங்கள் முன்வைத்துள்ள வேண்டுகோள்கள் நிறைவேற்றப்படுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்காக போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அவசியமில்லை என்றும் போராட்டங்களின் பின்னால் இருப்பது வேறு நோக்கங்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்புக்காக புதிய தேசிய கொள்கை தற்போது தயாரிக்கப்பட்டு நிறைவு செய்துள்ளதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும்போது மத உபதேசங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

மேலும்,மத அடிப்படைவாத சிந்தனைகளை கொண்ட புத்தகங்களை தடை செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இத்தீர்மானம் குறித்த ஒரு மதத்தை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டவை அல்ல என்றும் பொதுவாக அனைத்து வகையான மத அடிப்படைவாதத்தையும் தடுப்பதை நோக்கமாகக் கொண்டே எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன்,பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளில் தென்னை அல்லது வேறு பொருத்தமான பயிரினங்களை பயிரிடுவதன் அவசியத்தை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அதற்காக பயன்படுத்தக்கூடிய காணிகளை இனங்காணுமாறும் பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள்  கலந்துகொண்டனர்.

This slideshow requires JavaScript.