November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“போர்ட் சிட்டி” வேறொரு நாடு; சட்டமூலம் மீதான விவாதத்தை கோருகிறது எதிர்க்கட்சி

(photo : twitter/Port City Colombo)

“போர்ட் சிட்டி”என்பது வேறொரு நாடாகும், எனவே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நிதி அமைச்சின் சட்ட மூலத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நிதி அமைச்சின் சட்ட மூலத்தை வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றில் சமர்ப்பித்த போது இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்தது.

கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவானது, விசேட பொருளாதார வலயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும், பதிவுசெய்தல், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள் மற்றும் வேறு அங்கீகாரங்களை அளிப்பதற்கும், பொருளாதார வலயத்திலிருந்து வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கும் கொண்டு நடாத்துவதற்கும் மேம்பாடுகளை ஊக்குவிப்பது ஆகிய செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளது.

இத்தோடு, சர்வதேச வர்த்தகம், கப்பற்றொழில் முகாமைத்துவ தொழிற்பாடுகள், கரைகடந்த வங்கித் தொழில், நிதிசார் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வியாபார வழிமுறைகள், வெளியாட்களை பணிக்கு அமர்த்தல், கூட்டிணைக்கப்பட்ட தலைமையகங்களின் தொழிற்பாடுகள், பிராந்திய விநியோக தொழிற்பாடுகள், சுற்றுலாப் பயணத்துறை மற்றும் வேறு துணை சேவைகளை மேம்படுத்துவது ஆணைக்குழுவின் நோக்கமாக அமையும்.

மேலும் சர்வதேச பிணக்குத் தீர்வு நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதார வலயத்தினுள் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஏனைய கருமங்களை ஏற்பாடு செய்வதும் சட்ட மூலத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவின் பணியாகவுள்ளது.

இச் சட்டமூலம் பாராளுமன்றில் முதலாம் வாசிப்புக்காக விடப்பட்டதுடன்,  வெள்ளிக்கிழமை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக சபை முதல்வர் அறிவித்தார்.

இதன் போதே எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, போர்ட் சிட்டி என்பது தனியான ஒரு நாடாகும். ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களை உருவாக்குகின்றனர். எனவே இச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.