November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸாரின் கடமையை யாழ். முதல்வரின் படையணி எவ்வாறு முன்னெடுக்க முடியும்?: எதிர்க்கட்சி கேள்வி

இலங்கையில் ஒரே நாடு- ஒரே சட்டமென்றால், பொலிஸாரின் கடமையை எவ்வாறு யாழ். முதல்வரின் படையணி முன்னெடுக்க முடியும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன், இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். மாநகர முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ள ‘காவல்படை’ பணிக் குழுவினருக்கான சீருடை புலிகளின் காவல்துறை சீருடையை ஒத்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு, ஒரே சட்டமெனில், நாட்டில் ஒரு பொலிஸ் துறையே செயற்பட வேண்டும் என்றும் யாழ்ப்பாண முதல்வரால் தனியான பாதுகாப்புக் குழுவொன்று உருவாக்கப்பட்டு, பொலிஸார் செய்ய வேண்டிய பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் காவல்துறை பிரிவு அணிந்திருந்த ஆடைக்கு நிகரான ஆடையை அணிந்த குழுவினர், வீதிப் போக்குவரத்து ஒடுங்குபடுத்தல் பணிகளில் ஈடுவடுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாரதூரமான விடயமொன்றை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய அவர் இது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அரசாங்கம் சார்பில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ பதிலளிக்கையில், தற்போது சபையில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இல்லை என்றும் பாதுகாப்பு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.