
“சகல தோட்டத் தொழிலாளர்களையும் களத்தில் இறக்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறிவிட்டு எமது தோட்டத்தொழிலாளர்களை நசுக்கும் செயற்பாட்டை அரசாங்கமும், தோட்டக் கம்பனிகளும் முன்னெடுத்து வருகின்றது.
மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கொடுப்பதாகக் கூறிவிட்டு மலையக மக்களைப் பாதாள படுகுழியில் தள்ளிவிடும் சூழல் இன்று உருவாகியுள்ளது.
சம்பள நிர்ணய சபையில் 900 ரூபா உடன் 100 ரூபாவை சேர்த்து ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி சம்பளத்தை கொடுப்பதுடன் நிறுவனங்கள் பல்வேறு அட்டூழியங்களையும், அநியாயங்களையும் மலையகத்தில் செய்வதை பார்க்கின்றோம்.
இந்த மாதம் சம்பளத்தை பெற்றுக்கொள்ள மக்கள் செல்லும் போது, மேலதிகமாக எடுக்கும் கொழுந்துக்குப் பணம் கொடுக்க முடியாது, 20 கிலோ கொழுந்து பறித்துக்கொடுக்க வேண்டும், ஆண், பெண் சகலரும் கொழுந்து எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளை கம்பனிகள் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.