November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை ஜெனிவா நெருக்கடியை சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல’: வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசாங்கம் ஜெனிவா நெருக்கடிகளைச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்கள் நேரத்தில் ஜெனிவா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜயசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனிவா விவகாரத்தில் வெளியுறவு அமைச்சும், இலங்கையின் தூதரகமும் மிகச்சரியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஜெனிவா விடயங்களை கையாள்வதில் எமது நட்பு நாடுகள் மற்றும் எம்முடன் நெருக்கமாக செயற்படும் நாடுகளிடம் எமது தரப்பு காரணிகளை முன்வைத்தோம்.

எமது தூதுக்குழு, தூதரகம் இந்த விடயத்தில் செய்ய வேண்டிய உயரிய சேவையினை செய்துள்ளது.

கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச்சுடன் இணைந்தும், தனித்தும் எமது தூதரகம் நாட்டிற்காக செயற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகல அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், இப்போது வெளிநாட்டு தூதுவர்களை நியமிப்பது குறித்த நடவடிக்கைகளை விமர்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.