
தெற்காசியாவின் முதலாவது “டிஸ்னிலாண்ட்” களியாட்ட பூங்காவை இலங்கையின் போப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மலேசியா மற்றும் கொரியா முதலீடுகளைக் கொண்ட “கேவிட்டேஷன் கோ” என்ற கொரியாவின் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொரிய நிறுவனத்தின் தலைவர் பேகியம் கிம் மற்றும் இலங்கையின் பிரதிநிதி டாக்டர் பரிமலா ராஜோ மைக்கேல் ஆகியோர் இலங்கை அரசுடன் இதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திட்டத்திற்காக போப்பிட்டிய ஓய்வு பூங்கா அமைந்துள்ள பகுதியில் 150 ஏக்கர் நிலத்தை குறித்த நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த திட்டத்தை நிர்மாணிப்பதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு முன்னதாகவே இந்த திட்டத்திற்காக 30% நிதி பெறப்பட்டுள்ளதாக கொரிய நிறுவனத்தின் தலைவர் கிம் மற்றும் இலங்கையின் பிரதிநிதி மைக்கேல் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இந்தத் திட்டத்திற்காக அதிக முதலீட்டாளர்களை ஈர்க்க வாய்ப்புகள் உள்ளன என்று கிம் மற்றும் மைக்கேல் மேலும் கூறியுள்ளனர்.
இந்த பூங்காவை மலேசியாவின் ஜென்டிங் ஹைலேண்ட்ஸைப் போன்று நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்க உள்ளதாகவும் அதனுடன் சிறப்பு ரயில் சேவை, 300 அறைகள் கொண்ட ஹோட்டல் மற்றும் பல விடயங்களை இணைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டம் வெற்றியடையும் போது தெற்காசிய பிராந்தியத்தில் செயல்படும் ஒரே “டிஸ்னிலேண்டாக” இது இருக்கும்.