(FilePhoto)
தமிழ் அரசியல் கைதியொருவரின் தாயாருக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோண்டாவில் கிழக்கு பகுதியில் வசிக்கும் தேவராசா தேவராணி எனும் தமிழ் அரசியல் கைதியொருவரின் தாயாரான இவர் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.
இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை பதிவுசெய்து வருகிறார்.
அந்தவகையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கைதிகளுக்காக குரல் கொடுத்தார்.
இதனையடுத்து அன்றைய தினம் இரவு இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பின்னர் தொடர்ச்சியாக வேறு தொலைபேசி இலக்கங்களிலும் இருந்து அச்சுறுத்தும் வகையில் அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், தனியாக வசிக்கும் குறித்த தாய் குரலற்றவர்களின் குரல் அமைப்பிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியதுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை ‘இதற்கு முன்னரும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொண்டதால் இனந்தெரியாதவர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்றும் தனியாக வசிப்பதால் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் குறித்த தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ‘இவ்வாறு அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றன.
அவர்கள் வெளியில் சொல்வதற்கு அஞ்சுகிறார்கள். தமது உறவுகளின் விடுதலைக்காக ஜனநாயக ரீதியில் போராடும் உறவுகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் வருத்தமளிப்பதாக’ குரலற்றவர்களின் குரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.