இலங்கையின் புதிய அரசியலமைப்பில் பௌத்த, இந்து மதங்களை பாதுகாக்க, மதமாற்றத் தடை உள்ளடக்கப்பட வேண்டும் என்று சிவசேனை அமைப்பு தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை எனும் தலைப்பில் சிவசேனை அமைப்பின் ஸ்தாபகர் மறவன்புலவு சச்சிதானந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமி விபுலானந்தரின் ஜனன தினமான ஏப்ரல் 10 ஆம் திகதி இலங்கையின் 12 மாவட்டங்களில் உள்ள 23 நிலையங்களில் மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 12 மணிநேர விரதம் அனுஷ்டிப்பதாகவும் சிவசேனை தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை வழங்குவதோடு, மதமாற்றம் மற்றும் மாடு வெட்டுதலைத் தடை செய்யும் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் மறவன்புலவு சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.