ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் அஜித் மான்னப்பெருமவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெரும் 47,212 விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அஜித் மான்னப்பெருமவின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றிடத்துக்கு அஜித் மான்னப்பெருமவின் பெயர் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்துக்கு ஐக்கிய தேசிய கட்சி மூலம் தெரிவான மான்னப்பெரும், இராஜாங்க அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.