சிங்கள- தமிழ்ப் புத்தாண்டு காலத்தின் போது நாட்டில் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் வாரம் முதல் இந்த விசேட பாதுகாப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொது இடங்களில் பாதுகாப்புப் படையினர் சிவில் உடையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு புத்தாண்டு காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு விதிப்பது தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் விடுமுறை காலங்களில் ஊரடங்கு உத்தரவு விதிப்பது குறித்து எழுந்துள்ள ஊகங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார்.
எதிர்வரும் வாரங்களிலும், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.