ரஞ்சன் ராமநாயக்கவின் பாரளுமன்ற ஆசனம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு இடையே இடம்பெற்ற கருத்து மோதல்களால் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து சபாநாயகரினால் சபை நடவடிக்கைகள் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடிய போது, ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி ஆசனம் வெற்றிடமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினர்.
சபாநாயகர் இந்த விடயத்தில் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்காது தீர்மானங்களை எடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.
இதனை தொடர்ந்து ஆளும் கட்சியினர் அவரின் அந்தக் கருத்துக்கு எதிராக கோசமெழுப்பினர்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் சரத்பொன்சேகா, சபாநாயகராக சமல் ராஜபக்ஷ பதவி வகித்த காலத்தில் தனது பாராளுமன்ற ஆசனம் அநீதியான வகையில் இல்லாமல் செய்யப்பட்டதாக கூறினார்.
இவ்வேளையில் சரத் பொன்சேகாவுக்கும், சமல் ராஜபக்ஷவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்ற நிலையில், ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து முன்னால் வந்தனர்.
இதன்போது ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தும் வகையில் சபை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
பின்னர் 10 நிமிடங்களின் பின்னர் சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது.