July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமானது’: பௌத்த அமைப்புகள் ஜனாதிபதிக்கு கடிதம்

அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது மக்கள் ஆணைக்கு விரோதமான நடவடிக்கையாகும் என்று பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

14 பௌத்த அமைப்புகளின் தேரர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்தின் தீர்மானம் வாக்களித்த மக்களின் ஆணைக்கு விரோதமானது என்றும் பௌத்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பொதுத் தேர்தல் வாக்குறுதிக்கு அமைய நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைவுக் குழு, அதன் பரிந்துரைகளை முன்வைக்க முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது, அமைச்சரவையின் தூரநோக்கற்ற செயற்பாடாகும் என்றும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தி, மாகாணசபைகள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டால், 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் பௌத்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

வாக்களித்த மக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பை அரசாங்கம் குறுகிய காலத்தில் மறந்தமை கவலையளிப்பதாகவும் பௌத்த அமைப்புகள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.