இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இன்று இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது.
இதன்போது இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரி ஆப்கான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது, இருநாடுகளுக்கு இடையிலான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், சுகாதாரம் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பொதுவான நலன்களை உள்ளடக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.